ප්‍රංශයේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය

பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

Embassy Flag

இலங்கை – பிரான்ஸ் உறவுகள்

இலங்கையும் பிரான்சும் பரஸ்பர மரியாதை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீண்டகால மற்றும் நெருக்கமான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் தமது இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடின.

அரசியல் உறவுகள்

இலங்கையும் பிரான்சும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் தொடர்ச்சியான உரையாடலையும் ஒத்துழைப்பையும் பேணி வருகின்றன. உயர்மட்ட விஜயங்கள், இராஜதந்திர ஆலோசனைகள் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு திட்டங்கள் மூலம் அண்மைய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவடைந்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் கொழும்பிற்கு விஜயம் செய்தமை, இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைத் தலைவர்களும் பிரான்சிற்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டுள்ளனர்.

இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், புதிய கூட்டாண்மைத் துறைகளை அடையாளம் காணவும், இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகளுக்கிடையிலான முதலாவது இருதரப்பு ஆலோசனைக் கலந்துரையாடல்கள் 2023 ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்டன.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இலங்கையின் முக்கியமான பொருளாதாரப் பங்காளிகளில் ஒன்றாக பிரான்ஸ் விளங்குவதுடன், இலங்கையில் முதலீடு செய்யும் முன்னணி ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் ஆடைகள், தேயிலை, வாசனைப் பொருட்கள், இறப்பர் உற்பத்திப் பொருட்கள், மீன்பிடி மற்றும் கடலுணவுப் பொருட்கள், இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

பல பிரெஞ்சு நிறுவனங்கள் இலங்கையில் தமது செயற்பாடுகளை நிறுவியுள்ளதுடன், அவை முதலீடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், விநியோகம் மற்றும் போக்குவரத்து, சில்லறை வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய துறைகளில் பங்களித்து வருகின்றன. வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வணிகக் கூட்டாண்மைகள் மூலம் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளது.

கடல்சார் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் தொடர்புடைய நாடுகளாக, இலங்கையும் பிரான்சும் கடல்சார் விவகாரங்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பில் நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் கொழும்பில் பிராந்திய கடல்சார் ஆய்வு நிலையம் (Centre Régional d’Études Maritimes – CREM) நிறுவப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலைத் தடுப்பது தொடர்பான பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

கலாசார மற்றும் கல்வி உறவுகள்

கலாசார மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் இலங்கை–பிரான்ஸ் உறவுகளின் முக்கிய தூண்களில் ஒன்றாகும். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் அமைந்துள்ள Alliance Française நிலையங்களின் வலையமைப்பின் ஊடாக பிரெஞ்சு மொழியும் கலாசாரமும் இலங்கையில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்கின்றனர்.

உயர்கல்வி, கலை, தொல்லியல், பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் கல்விப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளுக்கும் ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. பரிஸைத் தலைமையகமாகக் கொண்ட யுனெஸ்கோ அமைப்புடன் இலங்கையின் தொடர்பு, கலாசார மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கிறது.

சுற்றுலாத்துறை மற்றும் மக்களிடையேயான உறவுகள்

பிரான்ஸ் இலங்கையின் முக்கியமான சுற்றுலா சந்தைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருகின்றனர். சுற்றுலாத்துறை, கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் பிரான்சில் வசிக்கும் இலங்கை சமூகத்தினர் ஆகியவை இரு நாடுகளின் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கின்றன.

தற்போது, இலங்கையும் பிரான்சும் இராஜதந்திரம், வர்த்தகம், கலாசாரம், கல்வி, கடல்சார் விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பரந்த துறைகளில் தொடர்ந்து விரிவடைந்து வரும் ஒரு ஆற்றல்மிக்க கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.