ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

யுனெஸ்கோவிற்கான நிரந்தர பிரதிநிதித்துவம்
யுனெஸ்கோவில் இலங்கை
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை பெறுவதற்கு முன்னரே, 14 நவம்பர் 1949 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் (UNESCO) உறுப்பினராக இணைந்தது. இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினராக 14 டிசம்பர் 1955 அன்று இணைந்தது.
புதுடில்லியில் அமைந்துள்ள யுனெஸ்கோ அலுவலகம் இலங்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு, யுனெஸ்கோ தலைமையகத்துடன் இணைந்து தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இலங்கை 2003–2011 காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டு தவணைகளுக்கு யுனெஸ்கோவின் நிறைவேற்றுச் சபைக்கு (Executive Board) தெரிவுசெய்யப்பட்டது.
இலங்கை முன்னர் பின்வரும் காலப்பகுதிகளில் யுனெஸ்கோ நிறைவேற்றுச் சபையில் பணியாற்றியுள்ளது:
1968–1974 – திரு. ஃப்ரெட்ரிக் டி சில்வா
1987–1991 – திரு. நிஸ்ஸங்க பராக்கிரம விஜயரத்ன, திரு. ஆனந்த பி. குருகே
2003–2007 – திரு. கருணாசேன கொடிதுவக்கு, திரு. மங்கள சமரவீர
2007–2011 – திரு. சுசில் பிரேமஜயந்த, திரு. பந்துல குணவர்தன
2015–2019 – திரு. அகில விராஜ் காரியவசம்
இலங்கை 2023 நவம்பர் மாதத்தில் 2023–2027 காலப்பகுதிக்கான யுனெஸ்கோ நிர்வாக சபை உறுப்பினராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டது.
இலங்கை, யுனெஸ்கோவின் பொதுச் சபையின் பின்வரும் துணை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது:
- தகவல் தொடர்பாடல் அபிவிருத்திக்கான சர்வதேசத் செயற்றிட்டத்தின் (IPDC) அரசுகளுக்கிடையிலான சபை (2025–2029)
- யுனெஸ்கோ தலைமையகக் குழு (2025–2029)
- உயிரியல் நெறிமுறைகள் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு (IGBC) (2023–2027)
மேலும், இலங்கை நிலையான அபிவிருத்தி இலக்கு 4 – கல்வி 2030 உயர்மட்ட வழிநடத்தல் குழுவில் (SDG 4 – Education 2030 High-Level Steering Committee – HLSC) 2026–2027 காலப்பகுதிக்கான உறுப்பினராக உள்ளது. இது நிலையான அபிவிருத்தி இலக்கு 4 (தரமான கல்வி) நோக்கி முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளை வழிநடத்தும் உலகளாவிய ஒருங்கிணைப்பு அமைப்பின் உச்ச நிலை அமைப்பாகும். கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பதவி வகிப்பதன் அடிப்படையில், HLSC தலைவர்கள் குழுவின் உறுப்பினராகச் செயற்படுகிறார். அதேவேளை, யுனெஸ்கோவிற்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர பிரதிநிதியும் HLSCக்கான ஷெர்பா (Sherpa) ஆகச் செயற்படுகிறார்.
கல்வி
இலங்கையின் சிறுவர் சனத்தொகை 4.2 மில்லியனாகும். நாட்டின் எழுத்தறிவு விகிதம் 92.5% ஆகும், இது தெற்காசியாவில் மிக உயர்ந்த மட்டமாகும். ஆரம்பக் கல்வி, பாலின சமத்துவம், குழந்தை மற்றும் தாய்வழி இறப்பு விகிதக் குறைப்பு உள்ளிட்ட அனைவருக்குமான கல்வி (Education for All – EFA) இலக்குகளில் பலவற்றை இலங்கை ஏற்கனவே அடைந்துள்ளது. இலங்கையின் EFA அபிவிருத்திச் சுட்டெண் 0.956 ஆகும். இது EFA இலக்குகளை முழுமையாக அடைவதற்கு இலங்கை மிக அருகில் இருப்பதை காட்டுகிறது.
விஞ்ஞானம்
யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான கடலியல் ஆணைக்குழு (IOC)
சர்வதேச கடலியல் ஆணைக்குழுவின் (IOC) கீழ், இந்தியப் பெருங்கடல் சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் தணிப்பு முறைமை நிறுவப்பட்டது. இது உலகளாவிய செயற்பாட்டு பல்நோக்கு கண்காணிப்பு மற்றும் பல்வேறு அபாயங்களுக்கான எச்சரிக்கை முறைமையின் ஒரு பகுதியாகும். இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு முறைமைக்கான அரசுகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் இலங்கை தொடர்ச்சியாகவும் செயற்பாட்டுடனும் பங்கேற்று வருகிறது.
இலங்கைக்கான யுனெஸ்கோவின் சுனாமி உதவி
2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, இலங்கையின் சுனாமி தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக யுனெஸ்கோ இரண்டு பணியாளர்களுடன் கூடிய தற்காலிக அலுவலக அமைப்பொன்றை நிறுவியது. மேலும், தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக யுனெஸ்கோவின் பல்வேறு பணிக்குழுக்கள் இலங்கைக்கு விஜயம் செய்தன.
யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பகங்கள் (Biosphere Reserves)
யுனெஸ்கோவின் மனிதனும் உயிர்க்கோளமும் (Man and the Biosphere – MAB) திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆசியாவின் 21 நாடுகளில் 94 உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
இலங்கையில் உள்ள நான்கு உயிர்க்கோளக் காப்பகங்கள் பின்வருமாறு:
- ஹுருலு – 1977
- சிங்கராஜ – 1978
- கன்னெலிய – தெடியகல – நாகியாதெனிய – 2004
- புந்தல – 2005
கலாசாரம்
மதச் சின்னங்கள் மற்றும் வெளிப்பாடுகளைத் தவறாகப் பயன்படுத்துதல்
யுனெஸ்கோவின் நிறைவேற்றுச் சபையின் 170ஆவது அமர்வில், மதச் சின்னங்கள் மற்றும் வெளிப்பாடுகளைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான ஒரு விடயத்தை இலங்கை முன்வைத்தது. இது பல உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் 2005ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுமாநாட்டின் 33ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கையின் உலக பாரம்பரியச் சின்னங்கள் (UNESCO World Heritage Sites)
இலங்கையில் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட 8 உலக பாரம்பரியத் சின்னங்கள் உள்ளன:
· பொலன்னறுவை பண்டைய நகரம் (1982)
· சிகிரியா பண்டைய நகரம் (1982)
· அனுராதபுரம் புனித நகரம் (1982)
· காலி பழைய நகரம் மற்றும் அதன் கோட்டைகள் (1988)
· கண்டி புனித நகரம் (1988)
· சிங்கராஜ வனப் பாதுகாப்புப் பகுதி (1988)
· தம்புள்ளை பொற்கோவில் (1991)
· இலங்கையின் மத்திய மலைநாடு (2010)
பட்டியலில் சேர்ப்பதற்காக பரிசீலனையில் உள்ள தளங்கள்:
· பண்டைய இலங்கையின் பௌத்த தியான மடாலயங்கள் (2024)
· இலங்கையின் தேயிலை கலாசார நிலப்பரப்பு (2025)
· ரிட்டிகல கடுமையான இயற்கை காப்பகம் (Ritigala Strict Natural Reserve) (2026)
இலங்கையின் அருவமான கலாசார மரபுகள் (Intangible Cultural Heritage)
· இலங்கையின் பாரம்பரிய கயிற்றுப் பொம்மலாட்ட நாடகமான ருகட நாட்ய (2018)
· தும்பர ரட்ட களல (Dumbara Rata Kalala) தயாரிக்கும் பாரம்பரிய கைவினைத் தொழில்நுட்பம் (2021)
· கித்துள் மதீம/கித்துள் கபீம (Kithul Madeema/Kithul Kapeema) – இலங்கையில் கித்துள் மரத்திலிருந்து பானம் பெறுவதற்கான பண்டைய உள்நாட்டு தொழில்நுட்பம் (2025)
உலக நினைவகப் பதிவேடு (Memory of the World)
- கரையோர இலங்கையின் டச்சு மத்திய அரசாங்க ஆவணக் காப்பகங்கள் 1640–1796 (2003)
- இந்தியப் பெருங்கடல் சுனாமி ஆவணக் காப்பகம் (2017)
- மகாவம்சம், இலங்கையின் பெரிய வரலாற்றுக் காவியம் (2023)
- 1873ஆம் ஆண்டு நடைபெற்ற பாணந்துறை வாதய (பாணந்துறை மகா விவாதம்) தொடர்பான ஆவணங்கள் (2025)
- மும்மொழிக் கல்வெட்டு (திரிபாஷா செல்லிபிய) (2025)
தொடர்பாடல் மற்றும் தகவல்
2006ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற உலக ஊடக சுதந்திர தினத்தை யுனெஸ்கோவின் அனுசரணையுடன் நடத்துவதற்கான இடமாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டது. 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, ஊடக சுதந்திரத்தின் கொள்கைகளை நினைவுகூர்ந்து கொண்டாடுவதற்கும், ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் பங்களிக்கும் உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு கௌரவம் செலுத்துவதற்கும், மே 3ஆம் திகதியை உலக ஊடக சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தியது.
உலக ஊடக சுதந்திர தினக் கொண்டாட்டங்களில், ஊடக சுதந்திரம் தொடர்பான முக்கிய விடயங்களை ஆராயும் இரண்டு நாள் சர்வதேச மாநாடுகள் இடம்பெறும். இந்த இரண்டு நாள் மாநாடு யுனெஸ்கோ/கில்லர்மோ கானோ உலக ஊடக சுதந்திரப் பரிசு (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கும் விழாவுடன் நிறைவடைகிறது. இலங்கையில் நடைபெற்ற மாநாட்டின் கருப்பொருள் “ஊடகம், அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு” ஆகும்.
இலங்கைப் பிரஜைகளுக்கான யுனெஸ்கோ புலமைப்பரிசில்கள்
யுனெஸ்கோவின் புலமைப்பரிசில் திட்டம், புலமைப்பரிசில்கள், கல்வி மற்றும் பயண உதவித்தொகைகளை வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் மூலம், யுனெஸ்கோவின் எதிர்பார்க்கப்படும் மூலோபாய நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்ட முன்னுரிமைகளுடன் நெருக்கமாக இணைந்துள்ள துறைகளில் மனித வள மேம்பாடு மற்றும் தேசிய திறன் வளர்ச்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இணை அனுசரணை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம், ஆர்வமுள்ள நன்கொடையாளர்கள் மற்றும் மேலதிக நிதி ஆதாரங்களுடன் இணைந்து புலமைப்பரிசில் இணை அனுசரணை ஏற்பாடுகளை அதிகரிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுவரை இலங்கைப் பிரஜைகள் பின்வரும் புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர்:
- யுனெஸ்கோ/இஸ்ரேல் (MASHAV) இணை அனுசரணை புலமைப்பரிசில்
- யுனெஸ்கோ/சீனா (The Great Wall) இணை அனுசரணை புலமைப்பரிசில்
- யுனெஸ்கோ புலமைப்பரிசில்கள்
- முன்னுரிமை நிகழ்ச்சித் திட்டப் பகுதிகளுக்கான ஆதரவு திட்டம்
- யுனெஸ்கோ/ஜப்பான்: OBUCHI இணை அனுசரணை புலமைப்பரிசில்கள்
- யுனெஸ்கோ/கொரிய குடியரசு (IPDC) இணை அனுசரணை புலமைப்பரிசில்கள்
தொடர்புகளுக்கு
யுனெஸ்கோவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதித்துவம்:
மாண்புமிகு சுகீஸ்வர குணரத்ன
பிரான்சிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கோவுக்கான நிரந்தர பிரதிநிதி
Bureaux M2.08 à 10
1, rue Miollis
75732 PARIS Cédex 15
தொலைபேசி: +33 1 45 68 30 30 / +33 1 45 68 30 40
தொலைநகல்: +33 1 47 83 29 45
மின்னஞ்சல்: dl.sri-lanka@unesco-delegations.org
இலங்கை தேசிய யுனெஸ்கோ ஆணைக்குழு:
இலங்கை தேசிய யுனெஸ்கோ ஆணைக்குழு
5ஆவது மாடி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
இசுருபாய, பத்தரமுல்லை
இலங்கை
தொலைபேசி: +94 11 21 77 002/3 (பொது)
தொலைநகல்: +94 11 21 77 007
மின்னஞ்சல்: slncu@slt.lk