இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1948 ஒக்டோபர் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது. அதன் பின்னர், இராஜதந்திரம், வர்த்தகம், கலாசாரம், கல்வி, சுற்றுலா மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் 1956 ஆம் ஆண்டு பரிஸில் பிரான்சிற்கான இலங்கைத் தூதரகம் நிறுவப்பட்டது. இத்தூதரகம், பிரெஞ்சுக் குடியரசிற்கான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உத்தியோகபூர்வ இராஜதந்திரப் பிரதிநிதித்துவமாக செயற்படுகிறது.
ஆரம்ப காலங்களில், தூதரகம் பரிஸில் உள்ள Rue d’Astorg பகுதியில் இருந்து செயற்பட்டது. பின்னர், பரிஸின் 16ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள 16 Rue Spontini என்ற தற்போதைய வளாகத்திற்கு மாற்றப்பட்டது. பல தசாப்தங்களாக, தூதரகத்தின் பணி பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது. பொருளாதார மேம்பாடு, சுற்றுலா ஊக்குவிப்பு, கலாசாரப் பரிமாற்றம், கொன்சுலர் சேவைகள் மற்றும் பிரான்சில் வாழும் இலங்கை சமூகத்துடனான தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவையும் அதன் பணிகளில் அடங்குகின்றன.
பரிஸைத் தலைமையகமாகக் கொண்டுள்ள யுனெஸ்கோ அமைப்பில் இலங்கையை இத்தூதரகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. கல்வி, கலாசாரம், பாரம்பரியப் பாதுகாப்பு மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான உரையாடல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தூதரகம் தீவிரமாகப் பங்களித்து வருகிறது. யுனெஸ்கோவில் இலங்கையின் பங்கேற்பானது, கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், கல்வி மற்றும் நிலையான அபிவிருத்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குப் பங்களித்துள்ளது.
பல ஆண்டுகளாக, தொடர்ச்சியாகப் பணியாற்றிய தூதுவர்களும் இராஜதந்திர அதிகாரிகளும், இலங்கை மற்றும் பிரான்ஸ் மக்களிடையே நட்புறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தூதரகம் பல்வேறு கலாசார நிகழ்வுகள், வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள், சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சிகள், கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
தற்போது, பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம், இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய இணைப்பாகத் தொடர்ந்து செயல்பட்டு, இராஜதந்திர உரையாடல்களுக்கு வசதியளித்தல், பிரான்சில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு ஆதரவளித்தல், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளின் மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் தூதரகம் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், தூதரகம் கொன்சுலர் சேவைகளை வழங்குவதுடன், பிரான்சின் பல்வேறு பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கை சமூகங்களுக்காக நடமாடும் கொன்சுலர் சேவைகள் உள்ளிட்ட சமூகத் தொடர்பு நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
