ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

மான்புமிகு சுகீஸ்வர குணரத்ன
பிரான்சுக்கான இலங்கை தூதுவர், மற்றும் யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதி
சுகீஸ்வர குணரத்ன 2000ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்தார். தற்போதைய பதவிக்கு முன்னர், அவர் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றினார்.
இதற்கு முன்னர், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவத்தில் பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகவும், எத்தியோப்பியாவிற்கான இலங்கை தூதுவராகவும், ஆபிரிக்க ஒன்றியத்திற்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார்.
நியூயோர்க்கில் பணியாற்றிய காலத்தில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (Convention on the Rights of Persons with Disabilities) 16 மற்றும் 17ஆவது அரசினங்களின் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, துணைத் தலைவராகச் செயல்பட்டார். மேலும், பல ஐக்கிய நாடுகள் மாநாடுகளுக்கு இலங்கை பிரதிநிதி குழுவின் உறுப்பினராகவும் இருந்ததோடு, மார்ச் 1ஆம் திகதியை "உலக கடல்புல் தினமாக" (World Seagrass Day), மற்றும் டிசம்பர் 21ஆம் திகதியை "உலக தியான தினமாக" (World Meditation Day) பிரகடனப்படுத்தும் இலங்கை முன்மொழிந்த இரு தீர்மானங்களுக்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆதரவைப் பெறுவதில் முன்னணிப் பங்கு வகித்தார்.
அவர் லண்டனில் இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளார்.
சுகீஸ்வர குணரத்னவின் பணிகளில், நியூடெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகர்/அரசியல் மற்றும் ஊடகப் பிரிவு அதிகாரியாகவும், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பணிமனையில் இரண்டாம் செயலாளராக மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களைக் கையாண்டமையும் அடங்கும்.
வெளிநாட்டலுவல் அமைச்சில், அவர் பொதுத் தூதரக பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகமாகவும், அமைச்சின் பேச்சாளராகவும்; ஐக்கிய நாடுகள், பன்னாட்டு விவகாரங்கள், மனித உரிமைகள் மற்றும் மாநாடுகள் பிரிவின் பணிப்பாளராகவும்; தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் பட்டம் பெற்றவர் ஆவார், மேலும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்புகள் பீடத்தில் இருந்து பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். மேலும், கனடாவின் டொரொன்டோவில் உள்ள செண்டெனியல் கல்லூரியில் இருந்து நிறுவன தொடர்பாடல் மற்றும் மக்கள் தொடர்பிய தொடர்பான பட்டப்பின் தகைமைகளையும் பெற்றுள்ளார்.
அவர் திருமணமானவர், மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.